Saturday, December 25, 2010

டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!


"அனைவருக்கும் யால்டா (Yalda) நல்வாழ்த்துக்கள்!"
என்ன? ஒன்றுமே புரியவில்லையா? "கிறிஸ்துமஸ் தினம்" என்று சொன்னால் தான் தெரியுமா?

டிசம்பர் 25 ம் தேதி, தேவகுமாரன் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரது பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவதாக எல்லோரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்தவ சகோதரர்களே, நண்பர்களே, பெரியோர்களே, இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று தான் பிறந்தார் என்று விவிலிய நூலில் எங்கேயும் எழுதப்படவில்லை. பல அறிஞர்கள் பைபிளில் ஒவ்வொரு சொல்லாக தேடிப் பார்த்து விட்டார்கள். இயேசு எந்த தேதியில் பிறந்தார் என்ற விபரம் கூட அங்கே இல்லை.

அப்படியானால் எதற்காக டிசம்பர் 25 ஐ, இயேசு பிறந்த தினம் என்று கூறுகிறார்கள்? இதற்கான விடை ரோமர்களின் வரலாற்றில் தேடிப் பார்க்கப் பட வேண்டும். ஆதி கால கிறிஸ்தவர்கள், பிற ரோம பிரஜைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றிக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சினை, கிறிஸ்தவத்துக்கு முந்திய ரோம மதத்தின் பண்டிகை நாட்கள். டிசம்பர் 25 ம், வேற்று மதம் ஒன்றின் புனித தினம். அதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

ரோமர்கள் டிசம்பர் 17 முதல் 25 வரை, "Saturnalia" என்றொரு பண்டிகையை கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களில் சட்ட ஒழுங்கு தளர்த்தப்படும். "மக்கள் தெருவில் பாடிக் கொண்டே நிர்வாணமாக வீடு வீடாக செல்வார்கள். பாலியல் பலாத்காரங்கள் சாதாரணமாக நடக்கும். மனித உருவத்தில் செய்யப்பட்ட பிஸ்கட் புசிப்பார்கள்." இவ்வாறு, தான் அவதானித்தவற்றை லூசியான் என்ற கிரேக்க சரித்திர ஆசிரியர் குறித்து வைத்துள்ளார்.

ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், இப்போதும் கிறிஸ்துமஸ் காலத்தில், மனித உருவத்தில் செய்யப்பட்ட பிஸ்கட்கள் தயாரிப்பார்கள். டிசம்பர் மாத பண்டிகை, தீமையை அழிப்பதாகவும் பொருள் கொள்ளப் படுகின்றது. ஒவ்வொரு ஊரிலும், தீய ஒழுக்கம் கொண்ட ஒரு ஆண்/பெண், பாவியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் மக்கள் யாரை "பாவி" என்று சுட்டிக்காட்டுகிறார்களோ, அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்படுவார். டிசம்பர் 25 அன்று தான் தீர்ப்புக் கூறும் நாள். பிற்காலத்தில், ரோமர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும், பழைய பண்டிகை தினத்தை கொண்டாடாமல் விடவில்லை. கிறிஸ்தவ சபை, டிசம்பர் 25 ம் திகதியை, இயேசுவின் பிறந்த தினமாக அறிவித்ததால், அது கிறிஸ்தவ புனித தினமாகி விட்டது.

டிசம்பர் 25, இன்னொரு கடவுளின் பிறந்த தினமாக கொண்டாடப் பட்டது. ஒரு காலத்தில் மித்ரா என்ற கடவுளை வழிபடும் மதம், இன்றைய ஈரான் முதல் ரோமாபுரி வரை பரவியிருந்தது. ரிக் வேதத்தில் எழுதப் பட்டிருப்பதால், வட இந்தியாவிலும் மித்ரா வழிபாடு இருந்திருக்க வேண்டும். குறிப்பாக ரோம படையினர் மத்தியில் மித்ரா வழிபாடு பிரபலமாக இருந்தது. பண்டைய ரோமர்களுக்கு மித்ரா கடவுளின் தோற்றம் பற்றிய கதை பரிச்சயமானது. ஆச்சரியப்படத் தக்கவாறு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்த கதையும், மித்ராவின் பிறப்பு குறித்த கதையும் ஒரே மாதிரி உள்ளன.

கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்பு (கி.மு.600)பல நூறாண்டுகளாக, மித்ரா வழிபாடு இருந்துள்ளது. ஆகவே இது ஒன்றும் தற்செயல் அல்ல. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபன மயப் படுத்தியவர்கள், மித்ராவின் கதையை, இயேசுவின் கதையாக திரித்திருக்க வாய்ப்புண்டு. இன்று மித்ராவின் கதை யாருக்கும் தெரியாது. ஆனால் அன்றிருந்த நிலை வேறு. இன்று எவ்வாறு ஏசு பிறந்த கதை சாதாராணமாக எல்லோருக்கும் தெரியுமோ, அதே போல பண்டைய ரோம மக்கள் அனைவருக்கும் மித்ரா பிறந்த கதை தெரிந்திருந்தது. ஆகவே ஒன்றை இன்னொன்றிற்கு மாற்றாக கொண்டு வந்ததன் மூலம், பழைய மத நம்பிக்கைகள் அடியோடு அழிக்கப் பட்டன.

ஆண்டவரின் குமாரனான மித்ரா, டிசம்பர் 25 அன்று, பூமியில் பிறந்ததாக கூறப் படுகின்றது. ஏசுவை ஈன்ற கன்னி மரியாள் போன்று, மித்ராவின் தாயான Anahita வும் கன்னியாகவே கடவுளின் குமாரனை பெற்றெடுத்தார். மித்ரா மரணமுற்ற போது, ஒரு குகைக்குள் புதைக்கப் பட்டார். சில நாட்களின் பின்னர் உயிர்த்தெழுந்தார். ஏசுவின் மரணம் பற்றிய கதையும், இந்த இடத்தில் ஒத்துப் போகின்றமை அவதானிக்கத் தக்கது. ஈரானில் சாரதூசர் என்ற தீர்க்கதரிசி, ஓரிறைக் கோட்பாட்டை கொண்டு வந்ததால், பல தெய்வங்களில் ஒன்றான மித்ரா முக்கியத்துவம் இழந்தது. சரதூசர், "இறைவன் ஒருவனே, அவன் பெயர் மாஸ்டா," என்று புதியதொரு மத சம்பிரதாயத்தைக் கொண்டு வந்தார். கிறிஸ்துமஸ் என்ற சொல்லில் உள்ள "மஸ்", மாஸ்டாவில் இருந்து திரிபடைந்த சொல்லாகும்.

அன்றிருந்த போப்பாண்டவர் லயோ(கி.பி. 376), மித்ரா வழிபாட்டுத் தலங்களை அழித்தார். அது மட்டுமல்ல, மித்ராவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஐ, இயேசு பிறந்த தினம் என்றும் அறிவித்தார். ஈரானுக்கு அயலில் உள்ள ஆர்மேனியாவில் மித்ரா வழிபாடு நீண்ட காலத்திற்கு தொடர்ந்தது. கிறிஸ்தவ மதத்தை அரசு மதமாக ஏற்றுக் கொண்ட முதலாவது நாடு ஆர்மேனியா என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களது கலண்டரின் படி, ஜனவரி 6 , இயேசுவின் பிறந்த தினமாக கொண்டாடப் பட்டது. (இன்றைக்கும் ரஷ்யா, கிரேக்கம் போன்ற நாடுகளில் அன்று தான் கிறிஸ்துமஸ்.) "கிறிஸ்துவுக்கு முன்", "கிறிஸ்துவுக்கு பின்" என்ற கால அளவீட்டுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ரோம சாம்ராஜ்ய கிறிஸ்தவர்கள், மதப் பிரச்சாரத்துக்கு வசதியாக, அவ்வாறு காலத்தை அளந்து வந்தனர். (தற்போது மதச் சார்பற்ற நாடுகளில் "நமது கால அளவீடு" என்று குறிப்பிடுகின்றனர்.)


பண்டைய ஈரானில் "ஒளி பிறக்கும் தினம்" கொண்டாடப்பட்டது. (இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி போன்றது. இதுவும் வருட இறுதியில் தான் வரும்.) ஈரானில் அந்த தினத்தை, யால்டா (Yalda) என்று அழைத்தனர். பார்சி மொழியில் "யால்(Yal )" என்றால் பிறப்பு, "டா(Da )" என்றால் நாள் என்று அர்த்தம். நாள் என்பது வெளிச்சம் என்றும் பொருள்படும். அதே நேரம் "டா" என்ற சொல், பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றன. நெதர்லாந்து மொழியில் "Dag"(டாக்), ஸ்கண்டிநேவிய மொழிகளில் "Dag " (டே), ஆங்கிலத்தில் "Day ". எல்லாமே நாளைக் குறிக்கும் சொல் ஒரே மாதிரி தோன்றுவதை அவதானிக்கலாம்.

கிறிஸ்துமஸ் தினத்தைக் குறிக்கும், ஈரானிய சொல்லான "Yalda " கிட்டத்தட்ட அதே உச்சரிப்பில் ஸ்கண்டிநேவிய மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய நாடுகளில் கிறிஸ்துமஸ், "Juledag" (உச்சரிப்பு "யூலே டெ") என்று அழைக்கப்படுகின்றது. பின்லாந்தில் "Joulu" (உச்சரிப்பு: "யவ்லு") என்று அழைக்கின்றார்கள். ஸ்கண்டிநேவிய நாடுகளில் டிசம்பர் 25, ஏசுவின் பிறந்த தினம் என்பதனை விட, அறுவடை நாள் என்ற அர்த்தத்திலும் கொண்டாடப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய நாடுகளில் உங்கள் நண்பர்கள் வசித்தால், அவர்களிடம் கேட்டு தகவலை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.




மேலதிக தகவல்களுக்கு:
Merry Mithra
Yalda
Mithra
Saturnalia





11 comments:

Unknown said...

டிசம்பர் 25 ல இவ்வளவு இருக்கா?!?!

அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி!

வாவணன் said...

December 25th is Greeks Sun god Birthday. Empire Constantinople the Great, who converted 25th December as Jesus Birthday to avoid civil disturbances in his kingdom. Also, he who declared and recognized the false theory of Son of God to save his throne. Please see BBC production Jesus the Witness video cassette.

Issadeen Rilwan said...

டிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... ? !http://changesdo.blogspot.com/2010/12/25.html

மார்கண்டேயன் said...

மிக அரிய மற்றும் பயனுள்ள தகவல்,
முடிந்தால், கீழே உள்ள விவாதத்தையும் படிக்கவும்,

http://allinall2010.blogspot.com/2010/12/blog-post_24.html

நட்புடன்,
மார்கண்டேயன்
http://markandaysureshkumar.blogspot.com

Colvin said...

கலையரசன் அவர்களே கிறிஸ்து பிறந்த தினம் டிசம்பர் 25யும் கிடையாது. பைளில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காது என்பதும் உண்மையே. மிதராஸ் தெய்வம் உயிர்த்தெழுந்தது என்ற கதை டாவின்சி கோட் நூலில்தான் உள்ளது (டாவிசின் கோட் நூலும் பிரதானமாக ஏற்கனவே வெளிவந்த 3 நாவல்களை தழுவியே எழுதப்பட்டது.) கிறிஸ்மஸ் கொண்டாடும் நிலையில் இலங்கைத் தமிழர்களும் இல்லை. நானும் அப்படியே ஆலயம் செல்வதோடு சரி. கொண்டாட்டம் எதிலும் ஈடுபடுவதில்லை.

அது சரி இந்த பதிவு அதுவும் கிறிஸ்மஸ் தினத்தன்று எதற்கு பதிந்தீர்கள் என்று தெரியவில்லை. அரசியல் பதிவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். இது மட்டுமல்ல இது போன்று கிறிஸ்மஸ் குறித்து ஏராளமான கதைகள் உள்ளன.

man said...

உனக்கு ஏன் தேவைஇல்லாத வேலை?

kowsy said...

அருமையான அறிய வேண்டிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி

பாண்டியன் said...

நல்ல பயனுள்ள கட்டுரை. நீங்கள் எழுதியுள்ள வரலாறு தொடர்பான கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

Perumal poonthamalli said...

வரலாற்று உண்மைகளை தேடுவதும், அதை தற்ப்போதுள்ள நிகழ்வுகலோடு ஒப்பிட்டுப்பார்த்தால், உலகில் எவ்வளவு மாற்றங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் வாழ்க்கை முறைகளை, உண்மையாக யாரும் எழுதுவதில்லை. பல முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ளதாகவே வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்கிறார்கள். இதுவரைக்கும் டிச 25 க்கு இப்படியொறு நிகழ்வு இருப்பது தெரியாது.வியப்பாகயிருக்கிறது.தகவல் அருமை தோழர்!

Perumal poonthamalli said...

தகவல் அருமை

Unknown said...

அருமை