Friday, March 01, 2013

ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு



மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே,  நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநாயகம், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது போலவும்", பலர் இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட அவ்வாறான நம்பிக்கையை கொண்டுள்ளனர். புராதன ஐரோப்பியர்களின் தலை சிறந்த  நாகரீகம், நமது காலத்திய சவூதி அரேபியர்களும், தாலிபான்களும் நடைமுறைப் படுத்திய "இஸ்லாமிய மத அடிப்படைவாத" நாகரீகத்தை பெரிதும் ஒத்திருந்தது, என்பது ஆச்சரியத்திற்குரியது. பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம்.

இன்றைக்கும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களில் கிரேக்க நாகரீகம் பற்றி வியந்து பேசப் படுகின்றது. "ஏதென்ஸ் தான், உலகில் முதன் முறையாக ஜனநாயகத்தை கண்டுபிடித்து, நடைமுறைப் படுத்திய நாடு என்று, இன்றைய ஜனநாயக காவலர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். ஏதென்ஸ் நகரம், ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் எனவும், அங்கிருந்து தான் ஐரோப்பிய நாகரீகம் தோன்றி வளர்ந்தது என்றும் போதிக்கின்றார்கள். அத்தகைய பெருமைக்குரிய கிரேக்க நாகரீகம் எவ்வாறு இருந்தது? அங்கு பெண்களின் உரிமைகள் மதிக்கப் பட்டனவா? இது பற்றி எந்த பாடநூலும், தமது மாணவர்களுக்கு சொல்வதில்லை.

ஐரோப்பிய பெண்களின் நிலைமை, பண்டைய ஐரோப்பிய நாகரீகத்தில் எந்த வகையிலும் சிறந்ததாக இருக்கவில்லை.நாகரீகத்தில் சிறந்த கிரேக்க நாட்டு பெண்கள், அங்கிருந்த அடிமைகளை விட சிறிதளவே சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக திருமணமான பெண்கள், வீட்டு வேலைகள் செய்வதற்கும், குழந்தை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். "எமது அன்றாட பாலியல் இச்சைகளுக்கு அடிமைப் பெண்களையும், சட்டபூர்வ குழந்தைகளை பெறுவதற்காக மனைவியரையும் வைத்திருக்கிறோம்..." என்று ஒரு கிரேக்க அறிஞர் எழுதுமளவிற்கு, அது சர்வ சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போது, பெண்கள் மீதான அடக்குமுறை, தற்போது சவூதி அரேபியாவில் பெண்கள் சுதந்திரமற்று இருக்கும் நிலைமை, இஸ்லாம் என்ற மதம் சார்ந்தது என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். அது அந்தப் பிராந்திய மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்ற உண்மை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இஸ்லாத்துக்கு முந்திய அரேபியாவை, கிரேக்க- ஐரோப்பியர்களே பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர். அதே போல, ஆப்கானிஸ்தானும் அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு பின்னர், கிரேக்கர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த நாடுகளில், கிரேக்கர்களின் கலாச்சாரம் பரவாமலா இருந்திருக்கும்? ஒரு காலத்தில் கிரேக்கர்களாக இருந்த மக்கள், இன்றிருக்கும் அரேபியர்களுடனும், ஆப்கானியர்களுடனும் ஒன்று கலக்காமல் இருந்திருப்பார்களா? இதையெல்லாம் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை.

கற்பு குறித்த இந்தியர்களின் புரிதல் என்னவென்று, தமிழ் வாசகர்களுக்கு நான் கூறத் தேவையில்லை. ஆனால், பெண்களின் கற்பு பற்றிய விதிகள் யாவும், பண்டைய கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டு வந்தன என்பது வியப்புக்குரியது அல்லவா?  "கற்பு நெறியானது ஆரியர்களால் புகுத்தப் பட்டது," என்று திராவிட அரசியல் சார்ந்த அறிஞர்கள் கூறி வருகின்றனர். அப்படியானால், இந்தியாவுக்குள் நுளைந்த ஆரியர்களும், கிரேக்கர்களும் ஒரே மாதிரியான இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப் பட்ட விடயம் தான். இன்றைய ஈரான் முதல் பாகிஸ்தான் வரையிலான பிரதேசங்களில் "சீத்தியர்கள்" என்ற ஈரானிய மொழி ஒன்றை பேசும் இனம் வாழ்ந்ததாக, கிரேக்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

"இந்து பண்பாடு" என்று கருதப்படும், இறந்த கணவனின் சிதையில் மனைவி உடன்கட்டை ஏறுவது சீத்தியரின் (Scythian)  கலாச்சாரம் ஆகும். வட இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஆரியர்கள் சீத்திய இனத்தவர்களாக இருக்கலாம்.  வட இந்திய ஆரியர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசியவர்கள் என்று கருத முடியாது. அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்த போதிலும், இந்தியாவை வெல்ல முடியாமல் திரும்பிச் சென்றான் என்று நமது சரித்திர நூல்கள் கூறுகின்றன. ஆனால், அலெக்சாண்டரின் படையில் இருந்த கிரேக்கர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். கிரேக்க தளபதி, பிற்காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்தான். அந்த ராஜ்ஜியம் ஒரு காலத்தில் இந்தியாவின் வட-மேற்குப் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இதைப் பற்றி எந்த சரித்திர நூலும் தெரிவிப்பதில்லை. ஏனிந்த வரலாறு இருட்டடிப்பு செய்யப் படுகின்றது?

இன்று உலகம் முழுவதும், ஐரோப்பிய மையவாத கருத்துக்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்றைய ஐரோப்பிய ஆட்சியாளர்கள், பண்டைய கிரேக்க வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே தெரிவு செய்து படிக்கிறார்கள். அவற்றை எமக்கும் படிப்பிக்கிறார்கள். அதிலிருந்து தான் இன்றைய ஆதிக்க அரசியல் கட்டமைக்கப் படுகின்றது. 

"உலகிற்கு நாகரீகத்தை போதிப்பது, நாகரீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த வெள்ளை இன மனிதனின் கடமை" என்று ஐரோப்பிய மையவாதிகள் நம்புகிறார்கள். இந்த காலனிய கால சிந்தனை இன்றைக்கும் கோலோச்சுகின்றது. 2001 ம் ஆண்டு, "பெண்களை கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டி தாலிபானின் பிடியில் இருந்து, ஆப்கான் பெண்களை விடுதலை செய்வதற்காக படையெடுத்ததாக," அமெரிக்கா ஒரு காரணத்தை கூறியது.  ஆனால், மறந்து விடாதீர்கள். 19 ம் நூற்றாண்டில், இதே காரணத்தை கூறித் தான் பிரித்தானியா இந்தியா மீது படையெடுத்தது! "பெண்களை உடன்கட்டை ஏற வைத்து கொடுமைப் படுத்தும், காட்டுமிராண்டி இந்துக்களிடமிருந்து இந்தியப் பெண்களை விடுதலை செய்வதற்காக..." என்று ஒரு காரணத்தை கூறித் தான், பிரிட்டன் இந்தியாவை காலனிப் படுத்தியது. 

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, கிரேக்கத்தில் இருந்து தான் உலகிற் சிறந்த நாகரீகத்தை ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். அதன் அர்த்தம், அன்று கிரேக்கத்தை தவிர, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ஆகவே அவர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஜனநாயகத்தை கண்டுபிடித்த ஏதென்ஸ் நாட்டு நாகரீகம் எப்படி இருந்தது? ஏதென்ஸ் நாட்டவரின் ஜனநாயகம் ஆண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம். கிரேக்க பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அவர்கள் மக்கள் மன்றத்திற்கு சென்று அரசியல் விவாதம் செய்யவும், கருத்துரைக்கவும் தடை இருந்தது.  பெண்கள் மட்டுமல்ல, அடிமைகளும் கிரேக்க ஜனநாயகத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. அதற்குப் பெயர் ஜனநாயகமா?

பெண்களை திருமணம் செய்து வைப்பதற்கு, பெற்றோர்கள் சீதனம் கொடுப்பது,  இந்தியர்களின் பாரம்பரியம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும், சீதனம் கொடுக்கும் மரபு பின்பற்றப் பட்டு வந்தது. பணக்காரப் பெற்றோர்கள், தமது சொத்து வெளியில் போகக் கூடாது என்பதற்காக, தமது மகளுக்கு ஒரு உறவுக்கார பையனாகப் பார்த்து மணம் முடித்து வைப்பார்கள். Medea என்ற கிரேக்க நாடகத்தில் பின்வரும் வசனம் ஒன்று வருகின்றது. "ஒரு ஆணை வாங்குவதற்கு மலையளவு பணம் தேவை. அப்படிக் கொடுத்த பின்னர், அந்த ஆண்  எமது உடலுக்கு உரிமை கொண்டாடுவது இன்னும் மோசமானது."

ஒரு சராசரி கிரேக்கப் பெண், 14 வயதிலேயே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தானில், 13-14 வயது சிறுமிகள், முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டத்தை, செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். பண்டைய கிரேக்கத்திலும், 14 வயது பருவ மங்கை,  30 வயதுக்கு மேற்பட்ட ஆடவனை திருமணம் செய்வது சட்டப்படி அனுமதிக்கப் பட்டது. திருமணம் முடிக்கும் நேரத்தில், அந்தப் பெண் கன்னியாக இருக்க வேண்டும். மணப்பெண் கன்னித் தன்மை இழந்துள்ளமை கணவனுக்கு தெரிய வந்தால், அவளை அடிமையாக விற்கலாம்.

"பெண்கள் படிக்கக் கூடாது" என்று, ஆப்கானிஸ்தானில் சட்டம் போட்ட தாலிபான்கள், பெண்களின் பாடசாலைகளையும் மூடினார்கள். எவராவது காரணம் கேட்டால், "அது தான் இஸ்லாமிய ஷரியா சட்டம்" என்று நியாயம் கற்பித்தார்கள். படிப்பறிவற்ற ஆப்கான் பாமர மக்களும், மெத்தப் படித்த சர்வதேச சமூகமும், அதனை உண்மை என்று நம்பியது. உண்மையில் அதுவும், இஸ்லாத்துக்கு முந்திய கிரேக்க நாகரீகம் என்று அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்டைய ஏதென்ஸ் நாகரீகத்தில், ஆண் பிள்ளைகளை மட்டுமே கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்பினார்கள். பெண்பிள்ளைகள் வீட்டில் இருக்க வேண்டும். 

படித்த மனைவியை எந்த ஆணும் விரும்பவில்லை. கிரேக்க நாடக ஆசிரியர் Menander  பின்வருமாறு எழுதுகின்றார்: "எவனொருவன் ஒரு பெண்ணுக்கு எழுதப் படிப்பிக்கிறானோ, அவன் ஒரு பாம்புக்கு நஞ்சைக் கொடுக்கிறான்." பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கும், குழந்தைகளை பெற்று பராமரிக்கவும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்பதே, பண்டைய கிரேக்கர்களின் நிலைப்பாடு. பொதுவாக நல்ல தண்ணீர் கிணறுகள் வீட்டுக்கு வெளியே சிறிது தூரத்தில் இருந்ததால், பெண்களே தண்ணீர் அள்ளிவர வேண்டியிருந்தது. ஆனால் அவ்வாறு வெளியே போகுமிடத்தில், அந்நிய ஆண்கள் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. அதனால், பணக்கார வீட்டுப் பெண்கள், தமது அடிமைகளையே தண்ணீர் அள்ளி வருமாறு வெளியே அனுப்புவார்கள்.  

ஆண் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால், பெண்கள் சமையலறைக்குள், அல்லது படுக்கையறைக்குள் சென்று விட வேண்டும். விருந்தினர்களின் கண்ணில் படுமாறு வெளியே நடமாடக் கூடாது. இது ஏதோ சவூதி அரேபியா அல்லது ஆப்கானிஸ்தானில் மட்டுமே காணக்கூடிய பெண் அடக்குமுறை என்று நினைத்து விடாதீர்கள். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும் அது தான் நடைமுறை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் பல சைவத் தமிழர்கள் வீடுகளில், இது போன்ற நடைமுறை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.  எனது உறவினர்கள் சிலர் கூட அத்தகைய வழக்கத்தை பின்பற்றினார்கள். இன்றைய தலைமுறையில் அது பெருமளவு மாறியிருக்கலாம். 

பாலியல் சுதந்திரம், ஆண்கள் மட்டுமே அனுபவிக்கும் உரிமையாக இருந்தது. கிரேக்க ஆண்கள், வீட்டில் வேலைக்கு வைத்திருக்கும் பெண் அடிமைகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது மட்டுமல்ல, வெளியே பாலியல் தொழிலாளிகளிடமும் சென்று வந்தனர்.  இந்தக் காரணங்களாலும்,   தேவையான அளவு பிள்ளைகளை பெற்ற பின்னரும், கிரேக்க ஆண்கள் தங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்வதை பெருமளவு குறைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அது பற்றி ஒரு மனைவி யாரிடமும் முறையிட முடியாது. ஒரு மாணவி, மாதத்தில் மூன்று தடவை உடலுறவு கொள்ள உரிமையுடையவள் என்று கிரேக்க சட்டம் ஒன்றில் எழுதப் பட்டிருந்தது.

கிரேக்க மனைவிமார், கணவனுடன் மட்டுமே உடல் உறவு வைத்து, தமது கற்பை பாதுகாக்க வேண்டும். கணவன் வெளியூர் சென்றிருந்தாலும், பல வருடங்களாக காணாமல்போனாலும், அல்லது மரணமடைந்தாலும், வேறொரு ஆடவனோடு உறவு வைக்கக் கூடாது. பெண்கள் விவாகரத்து பெறுவதை கிரேக்க சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஒரு தடவை, ஒரு பெண் விவாகரத்து கோரி  சட்ட மன்றத்திற்கு செல்லும் வழியில், இடைமறித்த கணவனால் பலவந்தமாக கடத்திச் செல்லப் பட்டதாகவும், தெருவில் நின்ற யாரும் தலையிடவில்லை என்றும்..." கிரேக்க இலக்கியம் ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. 

சரஸ்வதி என்ற பெண் கல்வித் தெய்வத்தை வழிபட்ட பண்டைய கால இந்து மதத்தில், பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்கு கலைகளை பயிலும் சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை. அதே நேரம், மேட்டுக்குடியினரின் பாலியல் அடிமைகளான "தேவ தாசிகள்" என்ற பெண்கள் மட்டுமே, நடனம், இசை போன்ற கலைகளை கற்றிருந்தனர். அதே மாதிரியான "தேவ தாசிகள்" பண்டைய கிரேக்கத்திலும் இருந்தனர். அவர்களின் பெயர் "Hetaeren".  "கிரேக்க தேவதாசிகள்" மட்டுமே, பண்டைய கிரேக்கத்தில் ஓரளவு கல்வியறிவு பெற்ற பெண்கள், என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் தாம் பெற்ற அறிவுக்கு விலையாக, உடலை விற்றுக் கொண்டனர்.  

கிரேக்க மேட்டுக்குடி பாலியல் தொழிலாளர்கள், தமது வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவதற்காக, நடனம், இசை போன்ற கலைகளை கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் பலர் விபச்சார விடுதிக்கு வந்து செல்வதால், அங்கே அரசியல் விவாதங்களும் நடக்கும். இதனால் கிரேக்க தேவதாசிகள் சிலர் அரசியல் அறிவு கைவரப் பெற்றிருந்தனர். அஸ்பாசியா (Aspasia) என்ற பெண், மதி நுட்பம் மிக்கவர் என்றும், அரசியல் உரைகளை எழுதுமளவு அறிவாளி என்றும் புகழப் படுகின்றார். தத்துவ அறிஞர்களுடன் வாதிடும் அளவுக்கு புலமை பெற்றிருந்தார். Pericles என்ற அரசவை உறுப்பினரின் வைப்பாட்டியாக இருந்ததால், அவருக்கு அரசாங்க அலுவல்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அஸ்பாசியா தான்,  புராதன ஐரோப்பாவின் வரலாற்றில், பெண்கல்வியை ஊக்குவித்த, முதலாவது பெண் உரிமைப் போராளியாக இருக்க வேண்டும்.  

(இந்தக் கட்டுரை, Historia (2/2013) சஞ்சிகையில் பிரசுரமான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டது.)

******************************

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.மேலைத்தேய நாசகார நாகரீகம்
2.வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்
3.முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்

21 comments:

மன்சி (Munsi) said...

உண்மையிலேயே உங்களுக்கு நல்ல ஓய்வு தேவை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முதல் செய்ததை இப்போது செய்வது மடத்தனம் என்பது சிறு குழந்தைக்கும் புரியும். ஐரோப்பியர்கள் இப்போதும் அப்படி இருப்பதில்லையையே.

Kalaiyarasan said...

// ஐரோப்பியர்கள் இப்போதும் அப்படி இருப்பதில்லையையே.//
இது ஒரு வரலாறு என்று தலைப்பிலேயே குறிப்பிட்டு இருக்கிறேன். கவனிக்கவில்லையா? நாங்கள் கடந்த கால வரலாறு பற்றி படிக்கக் கூடாது என்பதா உங்கள் வாதம்?
"நீங்கள் பிறப்பதற்கு முந்திய வரலாறு பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதும் குழந்தையாகவே இருப்பீர்கள்." - Marcus Tullius Cicero (ரோம தத்துவஞானி)

Kalaiyarasan said...

//மூவாயிரம் ஆண்டுகளுக்கு முதல் செய்ததை இப்போது செய்வது மடத்தனம் //
நீங்கள் நினைப்பதைப் போல, இந்த மூவாயிரம் வருடங்களில் மனிதர்கள் பெரிதாக மாறி விடவில்லை. "மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், எங்களை விட நாகரீகத்தில் சிறந்து விளங்கினார்கள்." என்று கூறும் ஐரோப்பிய பழமைவாதிகளை சந்தித்திருக்கிறேன். அமெரிக்காவில் உள்ள சில கிறிஸ்தவ அடிப்படைவாத சமூகங்கள், இப்போதும் அப்படியே இருக்கின்றன. Salt Lake City க்கு அருகில் வசிக்கும் ஆர்மிஷ் கிறிஸ்தவர்களின் கிராமங்களை சென்று பாருங்கள். இப்போதும் குதிரை வண்டிகளில் தான் பயணம் செய்கின்றனர். பலதார மணம் சாதாரணம். பெண்களை வீட்டு அடிமைகளாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள கடும்போக்கு கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், பெண்கள் சுதந்திரமாக வாழ்வதை விரும்புவதில்லை. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு செல்ல விரும்புகிறார்கள். மேலும், முப்பது வருடங்களுக்கு முந்திய ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரமாகத் தான் வாழ்ந்தார்கள். காபுல் நகரத்தில் முக்காடு போட்ட பெண்களை பார்க்க முடியாது. நிறையப் பெண்கள் உயர்கல்வி கற்று, பெரிய பதவிகளில் இருந்தனர்.

நண்பரே, இந்த மாற்றங்களுக்கு காரணம் குறிப்பிட்ட ஒரு அரசியல் பிரிவினர் நடைமுறைப் படுத்தும் கொள்கைகள். மேற்கத்திய லிபரல்களும், கம்யூனிஸ்டுகளும் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். மத அடிப்படைவாதிகள், பெண்களை வீட்டுக்குள் அடக்கி வைக்கப் பார்ப்பார்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, கிறிஸ்தவ, இந்து மத அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியான கொள்கை கொண்டவர்கள் தான். சிலநேரம் தேசியவாதிகளும், பிற்போக்கான பழமைவாதிகளை ஆதரிக்கின்றனர், அல்லது அவர்களது செயல்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். ஏன் என்று கேட்டால், அது தான் தேசிய ஒற்றுமை என்று காரணம் சொல்வார்கள்.

Kalaiyarasan said...

//மூவாயிரம் ஆண்டுகளுக்கு முதல் செய்ததை இப்போது செய்வது மடத்தனம் என்பது சிறு குழந்தைக்கும் புரியும். ஐரோப்பியர்கள் இப்போதும் அப்படி இருப்பதில்லையையே.//

இந்திய இந்துக்களும், தமிழர்களும் மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய, "கற்புநெறி, சீதனம் கொடுப்பது, பெண்களை வீட்டுக்குள் வைத்திருப்பது" போன்ற "மடத் தனங்களை" செய்து வருவதாக குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் ஐரோப்பியர்களை பற்றி மட்டுமே கவலைப் படுகின்றீர்கள். உங்கள் அருகில் இருக்கும் தமிழர்களையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

abdul hakkim said...

சகோ கலை உங்களின் எல்லா ஆக்கங்களையும் தவறாமல் படிப்பவன் நான். நல்ல ஆய்வுகள் ஆனல் இஸ்லாத்தைப்பற்றிய உங்களின் சில புரிதல்கள்தான் எனக்கு நெருடலாக உள்ளது காரணம் ஆப்கனில் தாலிபான்கள் செய்வதுதான் இஸ்லாமிய நடைமுறை என்று எல்லோரும் நினைப்பதுபோல்தான் நீங்களும் நினைத்துள்ளீர்களா? இதை ஏன் சொல்கிறேன் என்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ஐரோப்பா உட்பட உள்ள பகுதிகளில் பென்களுக்கு வழங்கப்படாத பல உரிமைகளையும் கண்ணியத்தையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. ஆகவே எல்லா விஷயங்களையும் அதற்குள்ளேயே சென்று ஆராய்ந்து எழுதும் நீங்கள் இஸ்லாத்தை முஸ்லீம்களை வைத்து எடைபோடாமல் அதன் அடிப்படைகளான குர்ஆனையும் நபிமொழியையும் ஆராய்ந்து எழுதுங்களேன்

Kalaiyarasan said...

Abdul Hakkim, ஆப்கானிஸ்தானில் தாலிபான் நடைமுறைப்படுத்தியது இஸ்லாமிய விதிகள் இல்லை என்றும், அவை ஆப்கானியரின் பாரம்பரிய பழமைவாத நம்பிக்கைகள் என்று தான் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். மீண்டும் ஒரு தடவை வாசிக்கவும்.

MOHAMED AMEER said...

தகவலுக்கு நன்றி நண்பரே

காரிகன் said...

தொடர்ந்து உங்கள் பதிவுகளை நான் படித்துவருகிறேன். வரலாற்றில் ஆர்வம் இருப்பவர்கள் உங்கள் எழுத்துக்களை விரும்பி படிப்பது உங்களின் பலம் என்ற போதிலும் நீங்கள் இஸ்லாமிய சார்பு அதிகம் கொண்டவராகவே தெரிகிறது. அதை நீங்கள் வெளிப்படையாகவே காட்டிக்கொள்ள தயங்குவது இல்லை என்பதும் நனறாகவே தெரிகிறது. இஸ்லாமிய மத அடக்குமுறை பெண்ணடிமைத்தனம் என்று நீங்கள் எழுதும் பதிவுகளில் கூட இந்த கொடுமை ஒரு மேலைநாட்டு இறக்குமதி என்று கிருத்துவ மேற்குலகத்தை நோக்கி குற்ற விரல் நீட்டுகிறீர்கள். நீங்கள் இப்படி எழுதும் சுதந்திரம் உள்ள ஒரு கிருஸ்துவ நாட்டில் மட்டுமே சாத்தியம். இதே ஒரு இஸ்லாமிய நாட்டில் நீங்கள் ஒரே வரியில் கூட அந்த மதத்தை விமர்சிக்க முடியாது. உடனே ஐரோப்பாவில் இப்போது மக்கள் தங்களை மத அமைப்போடு பார்ப்பது கிடையாது அவர்கள் கிருஸ்துவர்களே இல்லை என்று ஒரு பத்தி எழுதி, அடுத்த பாராவிலேயே அமெரிக்க அடக்குமுறையை பற்றி சொல்லும் போது இது ஒரு கிருஸ்துவ சதி என்று எழுதவும் உங்களால் முடியும். அத்தைகய கருத்து சுதந்திரம் கிருஸ்துவ நாடுகளில் மட்டுமே காணக்கிடைப்பது. அதை உங்களை போன்ற "நடுநிலைவாதிகள்" சரியாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள்.உங்கள் பதிவுகளில் முக்கால்வாசி கிருச்துவ வெறுப்பு மற்றும் மேலை நாடுகளின் மீது உங்களுக்கு இருக்கும் இழிவான கண்னோட்டமே அதிகமாக தென்படுகிறது.இன்றைக்கு இருக்கும் இஸ்லாமிய தாலிபான்கள் போல ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு கிருஸ்துவ மதவாதிகளும் மக்களை கடவுள் பெயரை சொல்லி கொடுமை படுத்தியது வரலாற்றில் அழிக்க முடியாதபடிக்கு பதிவாகி உள்ளது. ஐரோப்பாவில் கிறிஸ்துவம் செய்த மனித இன கொடுமைகளுக்குத்தான் அங்கே மறுமலர்ச்சி தோன்றி பகுத்தறிவு பிறந்தது அதனால் பல முன்னேற்றங்கள் உருவாக அதுவே காரணமாயிற்று.ஆரம்பத்தில் இதை அடக்கப்பார்த்த கிருஸ்துவ மதவாதிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களாலேயே ஓரம் கட்டப்பட்டார்கள். ஆனால் அந்த மறுமலர்ச்சிக்கான பாதை அங்கே சாத்தியமாக இருந்ததற்கு கிருஸ்துவத்தின் சகிப்புத்தன்மையும் ஒரு காரணம் என்பதை இன்றைக்கு பெரும்பாலானவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த பகுத்தறிவு பாதை ஒரு இஸ்லாமிய நாட்டில் சாத்தியமா என்ற கேள்விக்கு இல்லை என்பதை தவிர வேறு என்ன பதில் தரமுடியும் உங்களால்? நிறைய எழுதுகிறீர்கள் கொஞ்சம் நியாயமாகவும் எழுதுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

Kalaiyarasan said...

உங்களது விமர்சனத்திற்கு நன்றி, காரிகன்.
என்னுடைய பார்வை இஸ்லாமிய மதத்திற்கு சார்பானது அல்ல. இஸ்லாமிய நாகரீகம் பற்றிய தவறான கண்ணோட்டம் இன்று உலகம் முழுவதும் பரப்பப் பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமிய நாகரீகத்தின் பின்னர் தான் இன்றிருக்கும் ஐரோப்பிய நாகரீகம் உருவானது. (கவனிக்கவும்: நான் மதத்தை குறிப்பிடவில்லை. நாகரீகத்தை பற்றி பேசுகின்றேன்.) ஐரோப்பாவில் அந்த உண்மை நீண்ட காலமாக மறைக்கப் பட்டு வந்தது. அண்மைக் காலமாகத் தான், பாடசாலைகளில் கற்பிக்கின்றார்கள். மேலும், இந்த நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்பது தவறு. நீங்கள் மதத்தை முதன்மைப் படுத்தி சிந்திக்கின்றீர்கள். ஐரோப்பிய நாடுகள், மதத்தை உதறித் தள்ளி நூறாண்டுகளுக்கு மேலாகின்றன. இன்றுள்ள ஐரோப்பிய நாடுகள், மதச் சார்பற்ற, நாஸ்திக கொள்கையை பின்பற்றும் நாடுகள் ஆகும். அந்த நிலைமை, நீங்கள் இஸ்லாமிய நாடுகள் என்று கருதும் நாடுகளிலும் ஏற்கனவே உருவாகி இருந்தது. ஆனால், சவூதி அரேபியாவில் தோன்றிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள், எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டனர். அவர்களுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி வருகின்றன. 19 ம் நூற்றாண்டில், தனது சொந்த நாடான பிரான்சில் மதத்தை தடை செய்த நெப்போலியன், வட ஆப்பிரிக்க நாடுகளை படையெடுத்த பொழுது, மதத்திற்கு அதிக உரிமைகள் கொடுத்தது வரலாறு. பிரிட்டிஷ்காரரும் அதே மாதிரியான வேலைகளை செய்துள்ளனர். தங்களது சொந்த நாட்டு மக்களுக்கு மதம் தேவையில்லை, ஆனால் காலனிய நாட்டு மக்களுக்கு மதம் தேவை என்று பரப்பினார்கள். மொரோக்கோ முதல், இந்தோனேசியா வரையிலான, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நாடுகளில், இஸ்லாமிய மத அடிப்படைவாத குழுக்களை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்களிப்பு நிறைய உள்ளதை மறுக்க முடியாது. அதன் விளைவு தான் தாலிபான் போன்ற இஸ்லாமிய அடிபப்டைவாத குழுக்கள். மேலைத்தேய லிபரல் நாகரீகம் பரவிக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானில், அதற்கு ஆதரவு வழங்காமல், கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை யார் ஆதரித்தார்கள்? இதே "கிறிஸ்தவ நாடுகள்" தான் என்பதை மறக்கக் கூடாது. மேலைத்தேய கிறிஸ்தவ நாடுகள், சீசாவைத் திறந்து இஸ்லாமிய பூதத்தை வெளியே விட்டன. பின்னர் அந்த பூதத்தை காட்டி, தமது மக்களையும், பிற மதங்களை பின்பற்றும் உலக மக்களையும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சாரத்தை முறியடிப்பது நமது கடமையல்லவா? மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஜனநாயக வாதிகள், அல்லது இடதுசாரி எழுத்தாளர்கள் நான் எழுதுவதைப் போன்று தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டுரைகள், இந்த நாடுகளில் உள்ள ஊடகங்களில் பிரசுரமாகின்றன. பெருந்தேசிய வாதத்தை எதிர்த்துப் போராடும் பொழுது, அவர்களை குறுந் தேசியவாதிகளுக்கு சார்பானவர்கள் என்று கருதப்படும் ஆபத்தும் உண்டல்லவா? உதாரணத்திற்கு, சிங்கள பேரினவாதத்தின் தவறான அரசியல் பரப்புரைகளை, அது சிறுபான்மையினரை ஒடுக்குவதை பற்றி இடதுசாரி சிங்கள புத்திஜீவிகள் எழுதி வருகின்றனர். ஆனால், அவர்கள் தமிழர்களுக்கு, சிலநேரம் புலிகளுக்கு சார்பானவர்கள் என்று அரசு எதிர்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது. அவ்வாறான எதிர்ப் பிரச்சாரங்கள், சிலநேரம் சிங்களப் பொது மக்களையும் மயக்கத்தில் ஆழ்த்தலாம். அதே போன்ற கண்ணோட்டத்தில் இருந்து தான், நீங்களும் என் மீதான விமர்சனத்தை வைத்திருக்கிறீர்கள் என்று நம்புகின்றேன்.

Kalaiyarasan said...

நான் எந்த மதத்தையும், எனது பெற்றோரின் இந்து மதத்தையும் கூட பின்பற்றுவதில்லை. என்னைப் பொறுத்த வரையில், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து உட்பட எல்லா மதங்களும் மனித குலத்திற்கு விரோதமானவை தான். ஆனால், இன்றைய உலகில் "கலாச்சாரங்களின் மோதல்" நடப்பதாக, மேற்கத்திய அரசியல்வாதிகள் பரப்புரை செய்கின்றனர். ஊடகங்களும் அதற்கு ஒத்தூதுகின்றன. அவர்கள் தமது "கலாச்சார மோதல் கோட்பாட்டை" வலியுறுத்துவதற்காக, உங்களது விமர்சனத்தில் நீங்கள் தெரிவித்தது போன்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். அவை தவறானவையாக இருக்கலாம், எந்த ஆதாரமும் அற்றதாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு தேவையானது கிடைத்து விடுகின்றது. அதாவது, வரலாற்று உண்மைகளை திரிப்பதன் மூலம், குறிப்பிட்ட இனம் அல்லது மதத்தை சேர்ந்த மக்களைப் பற்றி மோசமான கருத்துக்களை பரப்புவதன் மூலம், தம்மை சுத்தமானவர்களாக, நாகரீகத்தில் சிறந்தவர்களாக நிரூபிக்க விரும்புகின்றனர். மறுபக்கத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அதையே தான் செய்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமே உலகில் சிறந்த நாகரீகம் கொண்டவர்கள் என்றும், மேலைத்தேய நாட்டினர் சீரழிந்த மோசமான கலாச்சாரத்தை பின்பற்றுவதாகவும், அவர்களை நம்பும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். இரண்டுமே, ஒரு பக்கச் சார்பானவை. மேலைத்தேய நாட்டினரின் சீரழிந்த கலாச்சாரம் பற்றி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மட்டும் பேசுவதில்லை. இந்து அடிப்படைவாத, தமிழ் இனவாத சிந்தனை கொண்ட தமிழர்களும் அவ்வாறு தான் நம்புகின்றனர். நான் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைக்கும் வரையில், எனக்கும் மேற்குலக கலாச்சாரம் பற்றி எதுவும் தெரியாது. நானும் அவர்களைப் போல தவறான கருத்துக்களை கொண்டிருந்தேன். ஆனால், ஐரோப்பியரின் வரலாறு, பண்பாடு பற்றி பாட நூல்களிலும், அனுபவத்திலும் படித்த பின்னர் தான், ஐரோப்பிய கலாச்சாரம் பற்றி சரியாகப் புரிந்து கொண்டேன். என்னை நானே திருத்திக் கொள்ள அது உதவியது.

காரிகன் said...

உங்களின் பின்னூட்டத்தில் பல
ஐரோப்பா இரண்டு மிக கொடிய உலக போர்களின் தீவிரத்தை அணு அணுவாக அனுபவித்ததின் வெளிப்பாடே அந்த மக்களின் மத நம்பிக்கை வீழ்ந்து போனதற்கு ஒரு மிக முக்கிய காரணம். இருந்தும் அந்த நாடுகளில் கிறிஸ்துவம் பெருமான்மையான மக்காளால் பின்பற்றப்படுவதால் ஐரோப்பாவை ஒரு கிருஸ்துவ நாடுகளின் கண்டம் என்று குறிப்பிடுவதில் தவறில்லை என்பது என் எண்ணம். இந்தியா என்னதான் மத சார்பற்ற நாடாக இருந்தாலும் அது ஒரு இந்து நாடு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்பதை போல.
ஐரோப்பா என்று வரும் போது அதன் மதத்தை மறக்காமல் குறிப்பிடும் நீங்கள் அரபியா என்று சொல்லும் போது மதம் என்று பேசாமல் அந்த நாகரீகம் என்று வார்த்தையில் விளையாடுவது ஒரு காரணத்திற்க்காகத்தான் என்பது வெளிப்படை. நீங்கள் எண்ணதான் மதத்தை பின் பற்றவில்லை என்று சுயநியாயம் சொல்லிக்கொண்டாலும் உங்களின் இஸ்லாமிய சார்பு தெளிவாகவே தெரிகிறது.
மேற்குலகில் அரசியல்வாதிகள் இப்போது மதத்தை கையில் எடுத்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயல் படுவதாக நீங்கள் குறிப்படுவது எத்தனை உண்மை? மதத்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் இருந்த ஐரோப்பிய நாட்டு மக்களிடம் பிழைப்புக்கு வந்த இஸ்லாமிய வந்தேறிகள் தன் மதம் தான் பெரியது என்று வீண் அகம்பாவம் பேசியதால், கிருத்துவ ஆலயங்களை பள்ளிவாசல்களாக மாற்றியதால், அங்கே இருக்கும் ஜனநாயகத்தை மதிக்காமல் இஸ்லாமை முன் நிறுத்தியதால், சகிப்புத்தன்மை இல்லாததால், மதத்தின் பெயரால் அக்கிரமங்கள் செய்ததால், உள்நாட்டு மக்களுக்கே இஸ்லாமினால் பாதுகாப்பு அச்சுறுதப்பட்டபோது அங்கே கிருத்துவ வலதுசாரி சிந்தனைகள் உயிர் பெற துவங்கின. அதன் வெளிப்பாடே நார்வேயில் நடைபெற்ற கொடூர கொலைகள் (அதை செய்தவன் சொன்ன ஒரு மிக முக்கிய காரணம் ஐரோப்பாவில் முஸ்லிம்களை அனுமதிப்பதை எதிர்த்து தான் இப்படி செய்ததாக சொன்னது) நெதர்லாந்து நாட்டில் வின் பில்டர்ஸ்(பெயர் தவறாக இருக்கலாம்) முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமும் இதே இஸ்லாமிய வெறுப்புதான். இதை வசதியாக மறந்து விட்டு ஐரோப்பாவில் மதவாதிகள் என்று பேசுவது மகா முட்டாள்தனம்.
இந்தியாவில் கூட தற்போது மோடி பிரதம வேட்பாளராக முன் நிருத்துவப்படுவதன் பின்னே இருப்பதே இதே இஸ்லாமிய எதிர்ப்பே. தமிழ்நாட்டில் விஸ்வரூப பட பிரச்சினைக்கு பிறகு ஒரு சாதாரண மனிதன் கூட தான் ஒரு இந்து உணர வைத்ததே இஸ்லாமியர்களின் வீண் மத பிடிவாதமே. இதனாலேயே மோடி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு சொல்கிறது. இதுவேதான் மேற்குலகில் தற்போது நடந்து வருகிறது.
நீங்கள் நெதர்லாந்து நாட்டில் இருந்து கொண்டு இப்படி மனம் போன போக்கில் எழுதுவது அந்த நாட்டின் சுதந்திரம். கிருஸ்துவர்கள் ஆலயங்கலுக்கு செல்லாததையும் தன்னை மத சார்பற்றவன் என்று சொல்வதையும் வைத்து ஐரோப்பா கிருஸ்துவத்தை கை விட்டு விட்டாதாக சொல்வது உங்களின் விருப்பமே தவிர உண்மை அல்ல. இன்றுவரை ஒரு அமெரிக்க அதிபர் ஒரு கிருஸ்துவ நம்பிக்கையாளராக இருக்கவேண்டும் என்பது ஒரு சொல்லாப்படாத விதி. போப் கூட ஒரு இஸ்லாமியராக மாறி விட்டதாக கதை விடும் இஸ்லாமிய மதவாதிகள்தான் ஐரோப்பாவில் மீண்டும் மக்கள் தங்கள் மதம் என்ன என்பதை பற்றி யோசிக்க தூண்டுகிறார்கள். இதை விரும்பாத சிலர் (உங்களை போன்று) இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசுவது சில உள் நோக்கங்களை காட்டி கொடுக்கிறது.
தங்கள் நாட்டில் மதம் வேண்டாம் என்று தீர்மானித்து தங்கள் காலனி நாடுகளில் மதத்தை வளர்த்ததாக நீங்கள் கூறுவது வரலாற்று உண்மை இல்லாதது. இன்று வரை இந்தியாவில் பல ஆர் எஸ் எஸ் அபிமானிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சொல்லும் மிக முக்கிய குற்றச்சாட்டு அவர்கள் கிருஸ்துவத்தை பரப்பவே இங்கே வந்தார்கள் என்பதே. உண்மையில் இந்தியாவில் உள்ள சிக்கலான மத அமைப்பு முறைகளை கண்டு பயந்து போன ஆங்கில அரசாங்கம் இந்தியர்களின் மத விஷயத்தில் மட்டும் தலை இட வேண்டாம் என்று முடிவெடுத்தது. நீங்கள் சொல்வது போல காலனி ஆதிக்க சமயங்களில் மேற்குலகில் மத நம்பிக்கை ஆட்டம் கண்டிருக்க வில்லை , மாறாக பல நாடுகளுக்கும் போப் தூதுவர்களை அனுப்பி கிருச்துவத்தை வளர்க்க அனுமதித்தார். இரண்டாம் உலக போருக்குபின்னே தான் அங்கே மக்களின் எண்ணம் மதத்தை விட்டு வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. ஆனால் இஸ்லாமோபோபியா தற்போது மையம் கொண்டுள்ள நிலையில் ஐரோப்பாவில் மீண்டும் மதவாதிகள் காலூன்ற அது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. (இஸ்லாமிய நாகரீகம் என்று நீங்கள் சொல்லும் நாகரீகம் எங்கிருந்து வந்தது என்பதும் எனக்கு தெரியும். வரலாற்றை புரட்டிபோடுவதாக நீங்கள் நினைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று இல்லாமல் உண்மையை எழுதவும்)

காரிகன் said...

கேள்விகளுக்கு பதில் இல்லை. முதலாவது நீங்கள் மத சம்பந்தமாக எழுதியதாலேயே நானும் அப்படி பேச வேண்டியதாக இருந்தது. அதை சாமர்த்தியமாக மறைத்து விட்டு என்னை மதம் என்ற நோக்கில் சிந்திப்பதாக சொல்வது வேடிக்கைதான்.

Kalaiyarasan said...

காரிகன் அவர்களுக்கு, உங்கள் பின்னூட்டங்களில் இருந்து, நீங்கள் ஒரு மதவாதி என்று தெளிவாகத் தெரிகின்றது. உங்களது சிந்தனை முழுவதும், ஒரு மதம் சார்ந்ததாகவும், பிற மதங்களின் மேல் வெறுப்பை தூண்டுவதாகவும் உள்ளது. அதனால் தான் என்னையும் ஒரு மதம் சார்ந்தவனாக முத்திரை குத்துகின்றீர்கள். காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் எனும் பழமொழி போல, மதவாதிகளின் கண்களுக்கு எல்லோரும் மதவாதிகளாக தெரிவதில் வியப்பில்லை. இந்தக் கட்டுரையில் நான், எந்த மதத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை. கட்டுரையில் வரும் தாலிபான், சவூதி அரேபியா பற்றிய குறிப்புகளில், அவை அந்தப் பிரதேசத்தின் பாரம்பாரிய கலாச்சாரம் என்று தான் எழுதினேன். அவற்றை (இஸ்லாமிய) மதம் சார்ந்து புரிந்து கொள்வது, உங்களுடைய குறுகிய மனப்பான்மையை காட்டுகின்றது. மதம் என்பது வேறு, கலாச்சாரம் என்பது வேறு. தாலிபான் போன்ற மத அடிப்படைவாதிகள், ஆப்கானியரின் பாரம்பரிய கலாச்சாரத்தை இஸ்லாம் என்று திரித்துக் கூறி வந்தார்கள். நீங்களும் அதைத் தான் செய்கின்றீர்கள்.

//ஐரோப்பா இரண்டு மிக கொடிய உலக போர்களின் தீவிரத்தை அணு அணுவாக அனுபவித்ததின் வெளிப்பாடே அந்த மக்களின் மத நம்பிக்கை வீழ்ந்து போனதற்கு ஒரு மிக முக்கிய காரணம். //

இதனை எங்கே படித்தீர்கள்? என்ன ஆதாரம்? நான் கடந்த 20 வருடங்களாக ஐரோப்பாவில் வாழ்கிறேன். ஐரோப்பிய வரலாற்றை பாடசாலையில் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது மாதிரி எங்கேயும் கேள்விப்படவில்லை. தயவுசெய்து.... தயவுசெய்து..... உங்களுக்கு ஒரு விடயம் தெரியா விட்டால், தெரியாது என்று சொல்லுங்கள். தெரிந்த மாதிரி பேசாதீர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, நெதர்லாந்து நாட்டில் மத நம்பிக்கையாளர்கள் முன்னரை விட பல மடங்கு அதிகரித்தார்கள். அது தெரியுமா? அதாவது, மிக கொடிய உலகப் போர்களின் தீவிரத்தை அனுபவித்ததால் தான் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கூடியது. இது சாதாரண விடயம். எந்த நாட்டிலும், தம்மால் முடியாத கையறு நிலையில் தான் மக்கள் கடவுளை நோக்கிச் செல்வார்கள்.

18 ம் நூற்றாண்டில் இருந்து தான், ஐரோப்பிய நாடுகள், மதச் சார்பற்ற நாடுகளாக மாறின. அதிலும் பிரான்ஸ் ஒரு நாஸ்திக நாடாக மாறியது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு தான் அந்த மாற்றங்கள் நடந்தன. கிறிஸ்தவ மதம் தடை செய்யப்பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் சிரச் சேதம் செய்யப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியை, அதாவது மதச் சார்பற்ற அரசு கட்டமைப்பை, பிற ஐரோப்பிய நாடுகளில் பரப்புவதற்காகத் தான் நெப்போலியனின் போர்கள் நடந்தன. நெப்போலியன் வென்ற நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவ மதம் தடை செய்யப் பட்டது. இது பற்றி மேலதிகமாக அறிய விரும்பினால், பிரெஞ்சுப் புரட்சி, நெப்போலியன் போர்கள் பற்றிய நூல்களை எடுத்து வாசியுங்கள். தயவுசெய்து, எதையும் வாசிக்காமல், பின்னூட்டம் இடாதீர்கள்.

Kalaiyarasan said...

//இருந்தும் அந்த நாடுகளில் கிறிஸ்துவம் பெருமான்மையான மக்காளால் பின்பற்றப்படுவதால் ஐரோப்பாவை ஒரு கிருஸ்துவ நாடுகளின் கண்டம் என்று குறிப்பிடுவதில் தவறில்லை என்பது என் எண்ணம். இந்தியா என்னதான் மத சார்பற்ற நாடாக இருந்தாலும் அது ஒரு இந்து நாடு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்பதை போல.//

இல்லை. பெரும்பான்மையான ஐரோப்பியர்கள் அதனை விரும்புவதில்லை. கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்கள் பெரும்பான்மையாக உள்ள, கிரீஸ், இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற தென் ஐரோப்பிய நாட்டு மக்கள் அவ்வாறு அழைத்துக் கொள்ள விரும்பலாம். வட ஐரோப்பிய நாட்டு மக்கள், கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை. அதற்கு காரணம் இருக்கின்றது. இந்த நாடுகளின் அரசியல் நிர்ணய சட்டங்கள், மதத்தையும், அரசையும் பிரித்து வைத்துள்ளன. அதனை பாடசாலைகளிலும் போதிக்கிறார்கள். ஐரோப்பிய பாடசாலைகளில் மதக் கல்வி போதிப்பதற்கு தடை உள்ளது. காலை நேர மதப் பிரார்த்தனை கூட தடை செய்யப் பட்டுள்ளது. இதனால், கிறிஸ்தவ நிறுவனங்கள் தனியார் பாடசாலைகளை நடத்துகின்றன. இது போன்ற பல காரணங்களால், ஐரோப்பிய நாடுகளை யாரும் கிறிஸ்தவ நாடுகள் என்று அழைப்பதில்லை. உங்களைப் போன்ற மதவாதிகள் மட்டுமே, "கிறிஸ்தவ நாடுகள்" என்று குறிப்பிட்டு சொல்வார்கள்.

//ஐரோப்பா என்று வரும் போது அதன் மதத்தை மறக்காமல் குறிப்பிடும் நீங்கள் அரபியா என்று சொல்லும் போது மதம் என்று பேசாமல் அந்த நாகரீகம் என்று வார்த்தையில் விளையாடுவது ஒரு காரணத்திற்க்காகத்தான் என்பது வெளிப்படை.//

நான் மதம் வேறு, நாகரீகம் வேறு என்று தான் கூறினேன். நீங்கள் தான், ஐரோப்பாவை "கிறிஸ்தவ நாடுகள்" என்று மதத்தை குறிப்பிட்டு பேசினீர்கள்.

//நீங்கள் எண்ணதான் மதத்தை பின் பற்றவில்லை என்று சுயநியாயம் சொல்லிக்கொண்டாலும் உங்களின் இஸ்லாமிய சார்பு தெளிவாகவே தெரிகிறது.//

ஐரோப்பிய இனவெறியர்களின் பிரச்சாரங்களை எதிர்த்துப் பேசினால், அவர்கள் எங்களை இஸ்லாமிய சார்பாளர்கள் என்று முத்திரை குத்துவார்கள். அதைத் தான் நீங்களும் செய்கின்றீர்கள். எனக்குத் தெரிந்த தமிழர்கள் சிலர் மனதில் ஐரோப்பியரின் வெள்ளை இனவெறி மறைந்திருக்கின்றது. "கறுப்புத் தோல், வெள்ளையின சிந்தனை."

Kalaiyarasan said...

நான் எனது பின்னூட்டத்தில், "கிறிஸ்தவ நாடுகள்" என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கிறேன். அதுவும் நீங்கள் சொன்னதை கிண்டலடிப்பது போலத் தான் குறிப்பிட்டேன். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாதது மாதிரி, எனது கூற்றை திரிபு படுத்தியதன் மூலம், உங்களது மனதில் உள்ள மதச் சார்புத் தன்மையை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

//மேற்குலகில் அரசியல்வாதிகள் இப்போது மதத்தை கையில் எடுத்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயல் படுவதாக நீங்கள் குறிப்படுவது எத்தனை உண்மை? மதத்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் இருந்த ஐரோப்பிய நாட்டு மக்களிடம் பிழைப்புக்கு வந்த இஸ்லாமிய வந்தேறிகள் தன் மதம் தான் பெரியது என்று வீண் அகம்பாவம் பேசியதால், கிருத்துவ ஆலயங்களை பள்ளிவாசல்களாக மாற்றியதால், அங்கே இருக்கும் ஜனநாயகத்தை மதிக்காமல் இஸ்லாமை முன் நிறுத்தியதால், சகிப்புத்தன்மை இல்லாததால், மதத்தின் பெயரால் அக்கிரமங்கள் செய்ததால், உள்நாட்டு மக்களுக்கே இஸ்லாமினால் பாதுகாப்பு அச்சுறுதப்பட்டபோது அங்கே கிருத்துவ வலதுசாரி சிந்தனைகள் உயிர் பெற துவங்கின. அதன் வெளிப்பாடே நார்வேயில் நடைபெற்ற கொடூர கொலைகள் (அதை செய்தவன் சொன்ன ஒரு மிக முக்கிய காரணம் ஐரோப்பாவில் முஸ்லிம்களை அனுமதிப்பதை எதிர்த்து தான் இப்படி செய்ததாக சொன்னது) நெதர்லாந்து நாட்டில் வின் பில்டர்ஸ்(பெயர் தவறாக இருக்கலாம்) முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமும் இதே இஸ்லாமிய வெறுப்புதான். இதை வசதியாக மறந்து விட்டு ஐரோப்பாவில் மதவாதிகள் என்று பேசுவது மகா முட்டாள்தனம்.//

ஐரோப்பிய இனவெறி பாசிஸ்டுகள் சொன்ன காரணங்களை, இங்கே வாந்தியெடுத்து இருக்கிறீர்கள். ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலகப் போரினால் பெரும் அழிவை சந்தித்து இருந்தன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மனித வளம் தேவைப் பட்டது. அதற்காக, துருக்கி, மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை ஒப்பந்த கூலிகளாக கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு கொடுப்பதை விட குறைந்த கூலி கொடுத்தார்கள். அதாவது, இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்வதைப் போன்று, ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வரப் பட்டவர்கள். அவர்கள் தான் புதிய ஐரோப்பிய நகரங்களை, சாலைகளை கட்டினார்கள். அப்போது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது. எல்லோருக்கும் வேலை கிடைத்தது. அதனால் நீங்கள் "இஸ்லாமிய குடியேறிகள்" என்று குறிப்பிடும் மக்களை, இங்கே குடும்பத்தோடு நிரந்தரமாக தங்கி வாழ அனுமதித்தார்கள். அப்போதெல்லாம் யாரும் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் செய்யவில்லை. இது தான் வரலாறு.

எண்பதுகளின் பின்னர், ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வெள்ளையினத்தவர்கள் பலருக்கு வேலையில்லை. ஆனால், நீங்கள் "இஸ்லாமிய குடியேறிகள்" என்று குறிப்பிடும் சமூகத்தில், வேலையில்லாப் பிரச்சினை இன்னும் அதிகம். இதன் காரணமாக, இரண்டு சமூகத்தவர் மத்தியிலும் வலதுசாரி - தீவிரவாத அரசியல் கருத்துக்கள் பரவின. மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த "இஸ்லாமிய குடியேறிகள்", தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இஸ்லாம் என்ற மதத்திற்குள் தேடினார்கள். "பூர்வீக வெள்ளையின மக்கள்" நவ-நாஜிச, அல்லது தீவிர வலதுசாரி அரசியலுக்குள் தீர்வைத் தேடினார்கள். இது தான் நடந்தது. எந்த நாட்டிலும், பேரினவாதிகள் சிறுபான்மை இனத்தவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டி பிரச்சாரம் செய்வார்கள். இலங்கையிலும் அது தான் நடந்தது. சிங்கள பேரினவாதிகள் எப்போதும், தமிழர்கள் மேல் குற்றம் சுமத்தி வந்தார்கள். வெள்ளை நிறவெறியர்கள், சிங்கள இனவெறியர்கள் பேசுவதைப் போன்று நீங்களும் பேசுகின்றீர்கள். இதன் மூலம், உங்களது அரசியல் சார்புத் தன்மையை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

இனவெறி பிடித்த நவ-நாஜிகள், தீவிர வலதுசாரிகள் கிறிஸ்தவ மதக் கலாச்சாரத்தை சிறந்தது என்று போற்றினார்கள். இஸ்லாமிய கலாச்சாரம் தாழ்ந்தது என்று பிரச்சாரம் செய்தார்கள். இது இலங்கையில் உள்ள "சிங்களவர் - தமிழர் பிரச்சினை" போன்றது. ஐரோப்பிய நவ-நாஜிகளின் கொள்கைகள் போன்றது தான், பௌத்த - சிங்கள பேரினவாதிகளின் கொள்கையும். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. இலங்கையில் இந்தக் கொள்கையால் எத்தனை இலட்சம் மக்கள் அழிந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமல்லவா? தெரிந்து கொண்டும் எதற்காக, ஐரோப்பிய நவ-நாஜிகளை ஆதரிக்கிறீர்கள்.

ஐரோப்பிய நவ-நாஜிகளின் அரசியல் நிலைப்பாட்டை நியாயப் படுத்தி பேசியதன் மூலம், நீங்களும் ஒரு தமிழ் நாஜி அல்லது பாசிஸ்ட் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஐரோப்பாவில் பாசிசக் கொள்கைகள் இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்து, கோடிக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தன. உங்களைப் போன்ற பாசிஸ்டுகளுடன் வாதாடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

abdul hakkim said...

காரிகன் அவர்கள்பென்னடிமை பற்றிய சகோ கலையின் பதிவில் வந்து பதிவிற்க்குச் சம்பந்தமே இல்லாமல் பேசுவதைப் பார்க்கும்போது அவரின் கோபத்திற்க்குக் காரணம் கலை அவர்களின் தலைப்பத்தான். இது தவறு என்று சொல்வதென்றால். ஐரோப்பாவில் பென்னுரிமையின்வரலாற்றை விளக்கி பின்னூட்டமிடவேண்டியதுதானே
எனக்கென்னவோ இந்தப்பெயரில் வருபவரின் கருத்துக்களைப்பார்க்கும்போது வலையில் இஸ்லாத்தை விமர்சித்தும் கிறிஸ்துவ ஊழியனுமாகவும் வலம். வரும் கோடாங்கியாக இருக்கமென்றே என்னுகின்றேன். ம் இவரைப் போன்றவர்களுக்கு கலையவர்கள்சொன்ன கடைசி வரிகளே எனது பதிலும்

காரிகன் said...

"இல்லை. பெரும்பான்மையான ஐரோப்பியர்கள் அதனை விரும்புவதில்லை. கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்கள் பெரும்பான்மையாக உள்ள, கிரீஸ், இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற தென் ஐரோப்பிய நாட்டு மக்கள் அவ்வாறு அழைத்துக் கொள்ள விரும்பலாம். வட ஐரோப்பிய நாட்டு மக்கள், கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை. அதற்கு காரணம் இருக்கின்றது. இந்த நாடுகளின் அரசியல் நிர்ணய சட்டங்கள், மதத்தையும், அரசையும் பிரித்து வைத்துள்ளன. அதனை பாடசாலைகளிலும் போதிக்கிறார்கள். ஐரோப்பிய பாடசாலைகளில் மதக் கல்வி போதிப்பதற்கு தடை உள்ளது. காலை நேர மதப் பிரார்த்தனை கூட தடை செய்யப் பட்டுள்ளது. இதனால், கிறிஸ்தவ நிறுவனங்கள் தனியார் பாடசாலைகளை நடத்துகின்றன. இது போன்ற பல காரணங்களால், ஐரோப்பிய நாடுகளை யாரும் கிறிஸ்தவ நாடுகள் என்று அழைப்பதில்லை. உங்களைப் போன்ற மதவாதிகள் மட்டுமே, "கிறிஸ்தவ நாடுகள்" என்று குறிப்பிட்டு சொல்வார்கள்."

வளைகுடா நாடுகளை இஸ்லாமிய நாடுகள் என்று சொல்வதை வரவேற்கும் மனப்பான்மை மேற்குலகை கிறிஸ்துவ பின்னணி கொண்டது என்று கூறினால் காணாமல் போவதேன்? என்னை மதவாதி என்று முத்திரை குத்தி உங்கள் மேலுள்ள இஸ்லாமிய மதசாயத்தை மறைத்துகொள்கிரீர்கள். நல்லது. நான் கிருச்துவத்தையே ஒரு அரசியல் கண்ணோட்டத்துடன்தான் பேசியுள்ளேன். வீண் பெருமையோ மத பிரச்சாரமோ செய்யவில்லை. தாய் வழி சமுதாயமாக இருந்த உலகில் பெண்ணிடமிருந்து அதிகாரத்தை பிடிங்கிகொள்ள ஆண் செய்த பல சூழ்ச்சிகள் தோல்வியடைந்து இறுதியாக அவன் கண்டுபிடித்ததுதான் மதம். உலகில் உள்ள எல்லா மதங்களுமே பெண்ணை அடிமையாக வைத்திருக்க வேண்டிய புனையூட்டப்பட்ட கருத்தை கூறி ஆண்களை பெண்களின் தலைவனாக முன்னிருத்துகின்றன. நீங்கள் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னாள் கிரேக்கர்கள் பெண்ணகளை அடிமைபோல நடத்தினார்கள் என்று 21ம் நூற்றாண்டில் இணையத்தில் எழுதுவது மிகப்பெரிய நகைச்சுவை. பெண்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் அப்போதைய காலகட்டத்தில் அடிமைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். தற்போதைய ஐரோப்பிய நாகரீகம் இஸ்லாமினால் உண்டானது என்கிற உங்கள் திகைப்பூட்டும் கண்டுபிடிப்புக்கு பெரிய சபாஷ். தோன்றுவதை எல்லாம் அதை மற்றவர்கள் கேள்வி கேட்காமல் நம்பவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்ப்பது ஆரோக்கியமானதல்ல........

Kalaiyarasan said...

//வளைகுடா நாடுகளை இஸ்லாமிய நாடுகள் என்று சொல்வதை வரவேற்கும் மனப்பான்மை மேற்குலகை கிறிஸ்துவ பின்னணி கொண்டது என்று கூறினால் காணாமல் போவதேன்? //

ஐயா, மதவாதியே! நீங்கள் தான் உலக நாடுகளை கிறிஸ்தவ நாடு, முஸ்லிம் நாடு, இந்து நாடு என்று மத அடிப்படையில் பிரித்துப் பார்கிறீர்கள். நான் அப்படி எங்கேயும் கூறவில்லை. எனது கட்டுரையில் எங்காவது அப்படி எழுதியிருந்தால், அதனை நக்கலாக நையாண்டி செய்யும் நோக்கோடு எழுதி இருப்பேன். ஐரோப்பாவில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பொருளாதார பிரச்சினை இருக்கையில், நீங்கள் "இஸ்லாமிய குடியேறிகள்" என்று பிரித்துப் பேசியதன் மூலம், ஐரோப்பிய இனவெறியர்களை உங்கள் சகோதரர்கள் ஆக்கிக் கொண்டீர்கள். அதற்காக வெட்கப் பட்டதாக தெரியவில்லை.

// நீங்கள் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னாள் கிரேக்கர்கள் பெண்ணகளை அடிமைபோல நடத்தினார்கள் என்று 21ம் நூற்றாண்டில் இணையத்தில் எழுதுவது மிகப்பெரிய நகைச்சுவை. பெண்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் அப்போதைய காலகட்டத்தில் அடிமைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.//

நல்லது. இந்த விடயம் உங்களுக்கு முன்னரே தெரிந்திருந்தால், ஐரோப்பியர்களின் நாகரீகம் ஒன்று சிறந்த நாகரீகம் இல்லை என்று எப்போதாவது சொல்லி இருக்கிறீர்களா? நீங்கள் எங்கேயாவது எழுதி இருந்தால், ஆதாரம் காட்ட முடியுமா? மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே, ஐரோப்பியர்கள் இன்றிருப்பதை போல நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்ததாக தான் நீங்களும், உங்களைப் போன்ற பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை மற்றவர்களுக்கும் பிரச்சாரம் செய்கிறீர்கள். மேலும் இது ஒரு வரலாறு. அதனை கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். Historia என்ற சஞ்சிகை பல ஐரோப்பிய மொழிகளில் வெளியாகின்றது. அதில் தான் இந்த தகவல்கள் இருந்தன. அதாவது, நீங்கள் "கிறிஸ்தவர்கள்" என்று குறிப்பிட்டு பேசிய ஐரோப்பியர்கள், தங்களது வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வதற்காக எழுதிய கட்டுரை. அதனை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். அதற்கான இணைப்பு இது : http://historianet.nl/nieuw-nummer/welkom-bij-historia-nr-22013
உங்களது மின்னஞ்சல் முவரியை தாருங்கள். அந்தக் கட்டுரையை ஸ்கேன் செய்து அனுப்புகிறேன். நீங்களாகவே வாசித்து அறிந்து கொள்ளுங்கள். உங்களது நண்பர்களுக்கும், ஐரோப்பிய நாகரீகம் இப்படித் தான் இருந்தது என்று சொல்லுங்கள். மக்கள் வரலாற்றை தெரிந்து கொள்ளக் கூடாது என்று தடுப்பது தவறு. உங்களைப் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமே, மக்களுக்கு வரலாறு தெரியக் கூடாது என்று மறைப்பார்கள். உங்கள் கையில் அதிகாரம் கிடைத்தால், இப்போது இருக்கும் வரலாற்று நூல்களை அழித்து விட்டு, புதிதாக இயற்றி எழுதுவீர்கள்.

//தற்போதைய ஐரோப்பிய நாகரீகம் இஸ்லாமினால் உண்டானது என்கிற உங்கள் திகைப்பூட்டும் கண்டுபிடிப்புக்கு பெரிய சபாஷ்//

இதனை நான் கண்டுபிடிக்கவில்லை, அறிவாளியே! நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்படி எல்லாம் எழுதி உங்களது அறியாமையை காட்டாதீர்கள். ஒரு விடயம் தெரியவில்லை என்றால், தெரியாது என்று சொல்வதற்கு வெட்கப் படத் தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய ஐரோப்பிய நாகரீகம் "இஸ்லாமினால்" உருவானது என்று நான் சொல்லவில்லை. அது உங்களைப் போன்ற மத அடிப்படைவாதிகளின் குறுகிய பார்வை. இஸ்லாமிய நாகரீகத்தில் இருந்து இன்றைய ஐரோப்பிய நாகரீகம் உருவானது என்று தான் சொன்னேன். நான் இங்கே மதத்தை பற்றி பேசவில்லை. நாகரீகத்தை பற்றி பேசுகின்றேன். ஸ்பெயின் நாட்டில் இருந்த இஸ்லாமிய நாகரீகத்தின் பல கூறுகள், பிற்காலத்தில் ஐரோப்பிய நாகரீகமாக உள்வாங்கப் பட்டன. இன்று நீங்கள் பள்ளிக்கூடங்களில் படிக்கும், கணிதம், அல்ஜிப்ரா, தாவரவியல், விலங்கியல், போன்ற பாடங்கள் எல்லாம் அவ்வாறு வந்தவை தான். அல்ஜிப்ரா என்பது "அல் சீப்ர்" என்ற அரபுச் சொல்லில் இருந்து வந்தது. இவை எல்லாம் நான் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் சரித்திர பாடத்தில் அப்படித் தான் கற்பிக்கிறார்கள். நீங்கள் படிக்கவில்லை என்றால், அது என் தவறல்ல. உங்களுக்கு கற்பித்த சரித்திர ஆசிரியர்களிடம் போய்க் கேளுங்கள்.

Kalaiyarasan said...

இதற்குப் பிறகும் நம்பா விட்டால், நீங்கள் இங்கே வந்து பாருங்கள். உங்களுக்கு நான் விமான டிக்கட் அனுப்புகின்றேன். இங்குள்ள பாடசாலைகளுக்கு சென்று, மாணவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று நேரில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். எப்போது வருகிறீர்கள்? இனிமேல் இதைப் பற்றி ஏதாவது பேச வேண்டுமென்றால், ஐரோப்பாவுக்கு வந்து நேரில் பார்த்த பின்னர் பேசுங்கள்.

இங்கே வந்தால், உங்கள் மனம் கவர்ந்த வில்டர்ஸ் போன்ற பாசிச- இனவெறியர்களையும் சந்திக்கலாம். உங்களை அவரது இரசிகர் என்று அறிமுகப் படுத்தி வைக்கிறேன். ஆனால், அவர் உங்களுடன் பேசுவாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், வில்டர்ஸ் போன்ற பாசிச-இனவெறியர்கள் முஸ்லிம்களை மட்டும் வெறுக்கவில்லை. என்னைப் போன்ற, உங்களைப் போன்ற கறுப்பர்களையும் வெறுக்கிறார்கள். "ஐரோப்பியர்களைப் போல நானும் ஒரு கிறிஸ்தவர், ஆகவே நாங்கள் சகோதரர்கள்," என்று சொல்லிப் பார்க்கலாம். அதனால் சகோதர பாசத்தோடு நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஐரோப்பாவில் உள்ள பாசிச இனவெறியர்கள், அடிக்கடி "முஸ்லிம்களும், கறுப்பர்களும்" என்று குறிப்பிட்டு பேசுவார்கள். அதன் அர்த்தம், நீங்கள் ஒரு முஸ்லிம் இல்லாவிட்டால், நிச்சயமாக கருப்பனாக இருப்பீர்கள். முஸ்லிம்களை மட்டுமல்ல, உங்களை மாதிரி, என்னை மாதிரியான கறுப்பர்களையும் வெளியேற்றுவது தான் அவர்கள் இலட்சியம். நாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால், ஐரோப்பிய வெள்ளையர்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். "காட்டுமிராண்டி கறுப்பர்களான" எங்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக ஏற்றுக் கொள்வதில்லை. நான் சொல்வதை நம்பா விட்டால், நீங்களாகவே நேரில் வந்து பாருங்கள். எப்போது வருகின்றீர்கள்?

காரிகன் said...

சில தொழில் நுட்ப சிக்கல்களால் என்னால் பெரிய பதிலை தரமுடியவில்லை. நீங்கள் என்னை மதவாதி என்று அழைப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் நீங்களும் இஸ்லாமிய சார்புள்ளவர்தான் என்பதை ஒத்துக்கொண்டால். இப்போது பிரச்சினை அது அல்ல. ஐரோப்பிய நாகரீகம் தான் சிறந்தது என்று நான் நினைப்பதாக நீங்கள் எண்ணம் கொள்வது மகா முட்டாள்தனம். ஐரோப்பியர்கள் குப்பையில் வாழ்ந்து வந்த போதே இந்தியாவில் ஒரு மேம்பட்ட நாகரீகம் புழக்கத்தில் இருந்தது. நாம் ஒரு கையால் உணவு சாப்பிடும் பழக்கத்தை நக்கல் செய்யும் ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாக இரண்டு கைகளாலும் காட்டுமிராண்டி போல சாப்பிட்டவர்கள். ஒருவேளை நீங்கள் ஐரோப்பிய நாகரீகமே சிறந்தது என்று முடிவு செய்திருக்கலாம். நானும் உங்களை போல என் யோசிக்க வேண்டும்? அடுத்து அரேபிய எண்கள் எனப்படும் எண்கள் உண்மையில் இந்திய எண்கள் என்று அழைக்கப்படவேண்டியவை. இந்தியாவில் இருந்தே இந்த எண்கள் கணிதம் போன்றவை இங்கே படை எடுத்த இஸ்லாமியர்களால் அரேபியா கொண்டு செல்லப்பட்டது . இந்த உண்மை தெரியுமா? கிரேக்க அறிவையே இஸ்லாமிய அறிஞர்கள் ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் படித்தார்கள். அதுவே பின்னாளில் ஐரோப்பாவுக்கு வந்தது.
நீங்கள் இனபோராட்டம் செய்த புலிகளையும் மத தீவிரவாதம் செய்யும் தாலிபான்களையும் ஒரே புள்ளியில் வைத்து வினோத ஜியாமெட்ரி வரைபவர்.சொகுசாக ஒரு ஐரோப்பிய தேசத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த நாட்டின் எல்லாவிதமான சுதந்திரங்களையும் அனுபவித்தபடி ஒரு சுபயோகி யாக இருக்கும் உங்களுக்கு வின் பில்டர்ஸ் போன்றவர்கள் ஒரு அச்சுறுத்தல்தான். எனவே வலதுசாரி மதவாதம் நவ நாசிகள் பாசிஸ்டுகள் என்று கூச்சல் போடுவது இயல்பானதே. உங்களுக்கு அவர்களை கண்டு அச்சம் வருவதில் வியப்பில்லைதான். இத்தனை எழுதும் உங்களுக்கு மதவாதிகளான தாலிபன்களுக்கு ஒரு நியாயம் இருப்பதைப்போல ஏன் வலதுசாரி பாசிஸ்ட்டு கூட்டத்தினருக்கும் நியாயம் இருக்கும் என்று தோன்றவில்லை?(It's sheer logic) உண்மையில் அங்கே வலது சாரிகள் வளர்ந்து வருவதை பற்றி உங்களுக்கு பிரச்சினை இல்லை. உங்களுடைய சொகுசு வாழ்க்கைக்கு வேட்டு வந்துவிடுமே என்றுதான் நீங்கள் இத்தனை ஆராவாரமாக குதிக்கிறீர்கள்.இது எனக்கு புரியாமலில்லை.
எனக்கு தெரியாத விஷயங்களை பற்றி நான் விவாதிப்பதே இல்லை. நீங்கள் எழுதிய எல்லா விஷயங்களும் எனக்கு தெரிந்ததுதான். எனக்கு தெரியாத எதையும் இதுவரை நீங்கள் எழுதவில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. மேலும் நீங்கள் எழுதும் எல்லாமே சிறுபிள்ளைத்தனமாகவும் விக்கிபீடியாவை தமிழில் படிப்பதுபோன்ற உணர்வையே எனக்கு கொடுக்கிறது. கான்ஸ்பிரசி தியரி என்று சொல்லப்படும் மேதாவித்தனமான சங்கதிகளை நீங்கள் வரலாற்று உண்மைபோல எழுதுவதையே நான் எதிர்க்கிறேன்.கருத்து சுதந்திரம் உள்ள ஒரு ஐரோப்பிய நாட்டில் இப்படி வசதியாக இருந்துகொண்டு அவர்களையே ஈனமாக எண்ணுவது தான் தமிழனின் பண்பாடு போலிருக்கிறது. எனக்கு விமான டிக்கெட் அனுப்பி நான் அங்கு வந்து வின் பில்டர்சை சந்திக்க வேண்டியதில்லை பிழைப்புக்காகவே நான் அயல் நாடுகளுக்கு செல்ல விரும்பியதில்லை. எனக்கு அந்த தேவையும் இல்லை. ஒருவேளை அப்படி என்னால் வின் பில்டர்சை சந்திக்க முடிந்தால் கண்டிப்பாக என் மதம், என் நிறம் என் மொழி போன்றவற்றை பற்றி விவாதிக்காமல் ஐரோப்பாவில் வந்தேறி இருக்கும் சில "புல்லுருவிகளை" பற்றி பேசக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
வாழ்க கலையரசரின் தொண்டு. நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். இன்னும் பல வரலாற்று "உண்மைகளை" உலகத்துக்கு தெரியப்படுத்தவேண்டும். அதையும் உங்களின் உண்மையான இஸ்லாமிய பெயரில் எழுதினால் நலமாக இருக்கும்.

abdul hakkim said...

சகோ கலையைப்பற்றி சகோ காரிகன் அவர்கள் இஸ்லாமிய மத அனுதாபி என று சொல்வது எனக்கு மிக ஆச்சர்யமாக. இருக்கிறது காரனம் கலையவர்கள் தன்னுடைய பதிவிலிம் முகநூலிலும் இஸ்லாமிய இயக்கவாதிகளை மதவாதி மதவாதிகள் என்றுதான் எழுதுகின்றார் அவர்களின்்பின்னுள்ள. நியாயங்களை சிலவேலைகளில் காணாமல் போகின்றார்