Friday, February 17, 2017

கேப்பாபுலவு, ஜல்லிக்கட்டு : இரண்டு போராட்டங்களின் கதை

ஈழத்தில் ஒரே காலகட்டத்தில் நடந்த இரண்டு போராட்டங்களின் கதை:
1. ஜல்லிக்கட்டு - ஈழத் தமிழ்த் தேசியவாதிகளின்  போராட்டம் 
2. கேப்பாபுலவு - ஈழத் தமிழ் மக்களின்  போராட்டம் 

இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், யாழ் நகரிலும், பின்னர் கொழும்பு நகரிலும் ஆதரவுப் போராட்டம் நடந்தது. சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுக்கப் பட்ட தன்னெழுச்சியான போராட்டம் என்று அறிவிக்கப் பட்டது. போருக்கு பின்னரான காலத்தில், முன்னர் எப்போதும் இல்லாதவாறு, பெருமளவு எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ஈழத்து ஜல்லிக்கட்டு போராட்டங்களில், ஐநூறு, ஆயிரம், அல்லது ஐயாயிரம் பேர் வந்திருந்ததாக எடுத்துக் கொள்வோம். அதிலே பங்குபற்றியவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்க இளைஞர்களாக இருந்தனர். யாழ்நகரில் நடந்த போராட்டத்தில், "ஏன் சாதாரண மக்களை காணவில்லை?" என்று பிபிசி தமிழோசை நிருபர் கேட்ட பொழுது, "இனிமேல் தான் மக்கள் வருவார்கள்..." என்று பதிலளித்தனர். ஆனால், அந்த போராட்டம் தொடரவுமில்லை, தமிழ் மக்கள் வரவுமில்லை.

தமிழ்த் தேசியவாத, தமிழ் இன உணர்வு அரசியல், எப்போதுமே தமிழ் மத்தியதர வர்க்க அரசியலாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் அது தான் உண்மை. "தமிழன்டா!", "தமிழன் என்று சொல்லடா!" போன்ற இனப்பெருமை பேசும் ஆணாதிக்க கோஷம் எதுவும் பெரும்பான்மை தமிழ் மக்களை கவரவில்லை. இது தமிழ்த் தேசியவாதிகள் எந்தளவுக்கு மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கின்றனர் எனக் காட்டுகின்றது.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம், மற்றும் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மக்கள் தானே என்று வாதாடலாம். உண்மையில் அதற்குக் காரணம் "தமிழ் இன உணர்வு" என்று நினைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமமாகும். மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தமக்குத் தெரிந்த வழிகளில் வெளிப்படுத்துவார்கள். ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஓட்டுப் போட்டதும் அதனால் தான். அவ்வாறு தான் மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் வந்ததற்கு வலுவான காரணம், அது எந்த வகையிலும் அரசுக்கு எதிரான போராட்டம் இல்லையென்பது தான். பலர் இதை நம்ப மறுப்பார்கள். "தமிழன்டா, தமிழன் என்று சொல்லடா" என்று ஒற்றுமையாக கோஷம் போடுவதால், சிறிலங்கா அரசு தமிழரின் சக்தி கண்டு அஞ்சி நடுங்கும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். தமிழ்த் தேசியம் பேசுவதும், தமிழ் உணர்வு கொள்வதும் அரச கட்டமைப்பை பாதுகாக்கும் இன முரண்பாட்டு அரசியல் என்பதை பலர் அறிவதில்லை.

இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் தான் போராடுவார்கள். இழப்பதற்கு எல்லாம் இருப்பவர்கள் போராட வர மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சென்றவர்கள் பெரும்பாலும் உத்தியோகம் பார்க்கும் வசதியான இளைஞர்கள், அல்லது உயர்கல்வி கற்கும் மாணவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதால், தமது கல்விக்கோ, வேலைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பது அவர்களுக்குத் தெரியும். 

மேலும், அன்றாட வாழ்வில் வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு "தமிழ் உணர்வு இல்லாமை" மட்டுமே ஒரு குறைபாடாக தெரிவதில் வியப்பில்லை. அதற்காக போராடுவதன் மூலம் தாம் சமூகத்திற்கு தொண்டாற்றி விட்டதாக திருப்திப் படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக ஒரு நாள் கூடி, தமிழ் உணர்வுக் கோஷங்கள் போட்டு விட்டு தமது வேலையைப் பார்க்க சென்று விட்டார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக போராட வந்தவர்கள், மக்களின் பிற போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று அப்போதே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நேரம், "இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது" என்றும், "இனிவருங்காலத்தில் இவ்வளவு பேரும் எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்" என்றும் பதில் சொன்னார்கள். ஆனால், அந்த உறுதிமொழியை யாரும் காப்பாற்றவில்லை. இப்போதும் தமிழ் மக்களின் பிற போராட்டங்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

இது நடந்து ஓரிரு வாரங்கள் கூட ஆகியிருக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டம் தொடங்கியது. இறுதிப் போரில், விமானப் படையினரால் அபகரிக்கப் பட்ட காணிகளை மீட்பதற்காக, பெண்களும், பிள்ளைகளும் போராடினார்கள். அது அவர்களது வாழ்வாதாரத்திற்கான போராட்டம். அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள். அதனால் எதற்கும் அஞ்சாமல் படையினரின் முகாமுக்கு முன்னால் அமர்ந்திருந்து போராடினார்கள்.

என்ன அதிசயம், ஜல்லிக்கட்டு போராளிகள் எவரையும் அங்கே காணவில்லை. ஜல்லிக்கட்டு காளைகளுக்காக பொங்கிய தமிழ் இன உணர்வு, கேப்பாபுலவு ஏழைகளுக்காக பொங்கவில்லை. ஒரு சில தமிழ்த் தேசியவாதிகள் சென்று பார்த்து விட்டு வந்தார்கள். தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளை சேர்ந்தோரும் சென்றிருந்தனர். 

சில நாட்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழுக்கு சேர்ந்த கூட்டத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட கேப்பாபிலவுக்கு வரவில்லை. அந்தளவுக்கு தமிழ் இன உணர்வாளர் யாருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லை. "கேப்பாபிலவு கிராமம் எளிதில் செல்ல முடியாத ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதாகவும், அங்கு செல்வதற்கான போக்குவரத்து கஷ்டம் எனவும்", ஒரு தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் காரணம் கண்டுபிடித்தார்.

இருப்பினும் சாதாரண இளைஞர்கள் சிலர் கேப்பாபுலவுக்கு சென்று மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்களே அவர்கள். சாதாரண பொது மக்களின் நலன் சார்ந்து அவர்கள் பக்கம் நிற்பதே இடதுசாரியம் என்பதை அவர்கள் நிரூபித்தனர். அதனால், அது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போராட்டமாக இருக்கவில்லை.

11.02.2017 அன்று யாழ்நகரில், மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில், கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக் கணக்கான அரசியல் ஆர்வலர்கள், சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் கலந்து கொண்டனர். தமிழ், சிங்கள இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு எழுப்பப் பட்ட கோஷங்களில் தமிழர் என்பதை தவிர்த்து, மக்கள் என்று சொல்லப் பட்டது ஒரு முக்கியமான விடயம். "மக்களின் காணிகளை மக்களுக்கே திருப்பிக் கொடு" என்று தான் கோஷம் எழுப்பப் பட்டது.

இதே நேரத்தில், கேப்பாபிலவு கிராமம் மக்கள் போராட்டக் களமாக மாறிக் கொண்டிருந்தது. பாடசாலை செல்ல வேண்டிய சிறு பிள்ளைகள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்களது கல்வி பாதிக்கப் படுகின்றது. அதனால் சமூக ஆர்வலர்கள் திறந்தவெளியில் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தினார்கள். கட்டாந்தரையில் அமர்ந்திருந்து பாடங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.

அங்கே ஒரு மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கேப்பாபிலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்தை பற்றிக் கேள்விப் பட்டு, தென்னிலங்கையில் இருந்து சிங்கள இடதுசாரிகளும் வந்தனர். ஒரே உணர்வோடு மக்களோடு சேர்ந்து போராடினார்கள். அதன் மூலம், கேப்பாபிலவு மக்களின் பிரச்சினை சிங்கள மக்கள் மத்தியிலும் போய்ச் சேர்ந்தது. தமிழருக்காக தமிழர் மட்டுமே போராடுவார்கள் என்று நினைத்திருந்த அரசு இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

பதினைந்து நாட்களாக தொடர்ந்து நடந்த கேப்பாபிலவு மக்களின் போராட்டம், மெல்ல மெல்ல அரசு அதிகாரத்தை அசைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த படைத் தலைமை, பின்னர் இறங்கி வந்து மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும் மக்கள் அங்கு சென்று குடியேறிய பின்னர் தான் எதுவும் நிச்சயமாகும். எது எப்படி இருப்பினும், கேப்பாபுலவு மக்களின் வெற்றி பெற்றால், அது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக கருதப் படும். மக்கள் போராட்டம் மூலம் அரசை பணிய வைப்பதன் மூலம் மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும்.

வரட்டுத் தமிழ்த் தேசியம் பேசும் வசதிபடைத்த தமிழ் மத்தியதர வர்க்க  இளைஞர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற கேப்பாபுலவு ஏழைத் தமிழ் மக்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பொதுவுடைமைத் தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னர் சொன்ன மாதிரி, இழப்பதற்கு எதுவுமற்ற மக்களே போராடத் தயாராக இருப்பார்கள்.  இங்கிலாந்து முதல் ஈழம் வரை அது உண்மையென நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வு பொங்குவது இறுதியில் பேரினவாத அரசுக்கே சாதகமானது. இனப்பெருமை பேசும் "தமிழன்டா" கோஷம், வேற்றின மக்கள் எம்மை நெருங்க விடாமல் விரட்டுகிறது. அதனால் தமிழர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். நாம் தமிழர் என்று சொல்லாமல், மக்கள் என்று அரசியல் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைக்கலாம்.

கேப்பாபிலவு போராட்டம் ஒரு மக்கள் புரட்சியின் ஆரம்பம். 

மேலதிக தகவல்களுக்கு: 

No comments: